top of page

மரு - மகன் (Translation - Son-in-law)

By K. Rajarathi


அரக்கப்பரக்க எல்லாவற்றையும் செய்து முடித்தாள் அவள். அவர்கள் வரும்முன் எல்லா வேலைகளையும் செய்து முடிக்க வேண்டும் என்ற அவசரம் அவளிடம் இருந்தது. அவளுக்கே அவளுக்கான சமையலறை வேலை வீடுசார் வேலைகள் எல்லாவற்றையும் செய்தாகிவிட்டது. முதுகு முன்பே வியர்வையில் குளித்திருந்தது. கைகளில் காந்தலும் எரிச்சலுமாக இருந்தது. மிக்ஸியில்தான் அறைத்திருந்தாலும் மீன்குழம்பு மசால் கைகளை காந்தவைத்திருந்தது. என்ன செய்தாலும் எரிச்சல் நீங்கவில்லை.


கல்லூரி நாட்களில் “ஏய்! என்னப்பா இது? உன் கை பஞ்சுமாரி இருக்கு” என்று ஆச்சரியப்பட்ட தோழிகளின் வார்த்தைகள் நினைவுக்குவந்தன. தன் கைகளை ஒருமுறை பார்த்துக்கொண்டாள். இப்போது கை பஞ்சுமாரி இல்லை என்று மட்டும் தெரிந்தது. “கைய கிய்ய சுட்டுக்கப்போற போ! போ! அம்மா பாத்துக்கிறேன்” என்று அடுப்பங்கறையில் தன்னை அனுமதிக்காத அம்மாவின் நினைவு வந்தது அவளுக்கு. “உன் அம்மா உனக்கு ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்காங்க” என்று சொல்லும் கணவனின் வார்த்தைகளும் நினைவுக்கு வந்தது. எல்லா வேலைகளையும் எப்படி செய்ய வேண்டும் என்று அம்மா சொல்லிக் கொடுத்ததும் நினைவுக்கு வந்தது.


அம்மா இல்லாத வேளையில் அண்ணணுடன் சமையலறையில் புதிய முயற்சிகள் பண்ணியது, அண்ணண்‌ ஆஃப் பாயில் போட்டுக் கொடுத்தது எல்லாம் ஏதோ நேற்று நடந்ததுபோலிருக்கிறது. அக்கா காய்வெட்டுவதுதவிர எதுவும் செய்ததாக நினைவில்லை அவளுக்கு. அம்மா ஆண்பிள்ளை பெண்பிள்ளை பேதம்காட்டியதாக நினைவில்லை அவளுக்கு. அம்மாகாட்டிய அன்பு மட்டுமே நினைவிருக்கிறது. அம்மாவுக்கு முடியாதபோது அப்பா சமைத்ததும் நினைவிலாடியது அவளுக்கு.





“காலேஜ் முடிச்சும் முடியாமலும் கல்யாணம். நீ என்னத்த சமைப்ப. இந்த சுத்து வேலைய பாருமா” என்ற மாமியார், பாத்திரம் கழுவி வீடு துடைத்தபின் காய்ச்சல் வந்ததைப்பார்த்து “அட என்னடா பொண்ணு இது! இதுக்கே காச்ச வந்துட்டே” என்று ஆச்சரியப்பட்டதும் நினைவுக்கு வந்தது. மெல்ல தனக்கும் நன்றாக சமைக்கத் தெரியும் என்று மறைந்த தன் மாமியாரிடம் சொன்ன நாளை நினைத்தாள் அவள். “நீங்க சமைக்கவிட்டீங்கன்னா சமைக்கிறேன் அத்த” என்றதற்கு அவர் “ ஆமா நான் சமைக்க விட்டாத்தான தெரியும் நீ சமைப்பியா இல்லையான்னு. நான் சமையல்கட்ட விட்டுக்கொடுக்காத மாமியார் இல்லம்மா. இனிமே உன் வீட்டுல நீதான் எல்லா நாளும் சமைக்கனும். அதுக்குள்ள அடுப்பங்கறைல உன்ன ஏன் வேகவிடனும்னு நினைச்சேன்” என்ற அவரது பரந்த மனதை நினைத்துப் பார்த்தாள். தான் சமைத்த உணவை “ரொம்ப நல்லா சமச்சிருக்க” என்று பாராட்டி மகிழ்ந்த அவர் முகம் மனக்கண்ணில் வந்து சென்றது. சமயத்தில் “எண்ணத்த சமைக்க எல்லா நாளும்” என்ற அவரது சலிப்பு அவளுக்கு இந்த சமையலறை எல்லாப் பெண்களையும் சாகும்வரை தொடரும் உறவோ? என்ற எண்ணத்தைத்தந்து போனது. எப்போதாவது அவர் “இந்த பொண்ணா பொறந்தாவபடுற கஷ்டம் இருக்கே” என்று அங்கலாய்த்துக்கொண்டதையும் நினைவுகூர்ந்தாள் அவள்.


“சந்தோஷமாகத்தானே சமைக்கிறேன் ஆனாலும் இது என்ன சலிப்பு. எல்லாப் பெண்களும் இப்படியா? இல்ல நான் மட்டும்தான் இப்படியெல்லாம் நினைக்கிறேனோ?” என்று கேட்டது அவள் மனம். வலிகொண்ட கால்கள்வேறு நீண்டநேரம் தான் நின்றுகொண்டே இருப்பதை நியாபகப்படுத்தியது. குளித்து உடை மாற்றிவந்தபிண்ணும் கை எரிச்சல் நீங்கவில்லை. சிறிது தேங்காய் எண்ணெய்யை கையில் ஊற்றித்தேய்த்துக்கொண்டாள் அவள்.


வாசலில் சத்தம் கேட்கிறது. இதோ அவர்கள் வந்துவிட்டார்கள். புதிதாய் திருமணமான தன் மகளையும் அவள் கணவரையும் மலர்ச்சியுடன் வரவேற்றாள் அவள். “மீன் நல்லாயிருந்ததா? சாப்பாடு வை” என்ற கணவரிடம் “ஆமா” என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தாள். எல்லோரையும் உட்காரவைத்து உணவு பரிமாறுகையில் சட்டென்று கையைப்பிடித்து “நீங்களும் உக்காருங்க அத்த. சேர்ந்து சாப்பிடுவோம்” என்ற மருமகன் அவள் கண்களுக்கு மகனாய் தெரிந்தார். இப்போது கையின் காந்தல் உணர்வுகாணாமல்போய் அவள் கண்ணோரம் துளிர்த்தது ஓர் துளி.



By K. Rajarathi




Recent Posts

See All
The Crooked Smile

By Aatreyee Chakrabarty It was night. The sky was choked with black clouds giving the atmosphere an eerie, almost apocalyptic touch as if...

 
 
 
लॉक डाउन

By Deepak Kulshrestha मैं और असलम दोनों ही इंजीनियरिंग कॉलेज में साथ पढ़ते थे, वहीं हमारी  दोस्ती हुई और परवान चढ़ी. वो पाँच वक़्त का नमाज़ी...

 
 
 
अधूरी कहानी - इंतज़ार

By Deepak Kulshrestha आज पूरे 25 साल बाद देखा था उसे, यहीं कोविड वार्ड में. मेरी ड्यूटी यहीं इस सुदूर ग्रामीण अंचल के इस छोटे से अस्पताल...

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page