" பேசுங்கள் பழகுங்கள் "
By Jeevitha S (ஜீவந்த் )
மாலை பொழுது நெருங்க நெருங்க சூரியன் தன் கதிர்களையெல்லாம் திரட்டிக் கொண்டு
தன் வீடு செல்ல தயாராகிக் கொண்டு இருந்தது. மேகங்கள் ஒரு புறமாய் திரண்டு கருத்து இருந்தது.
சில்லென்ற காற்று மேகங்களை உரசி மழை பெய்ய வழி வகை செய்துகொண்டு இருந்தது.
பட படவென தூறல் விழ சட சட வென மழை பொழிய மாலை பொழுது ரம்யத்தில் நனைய
ஆரம்பித்தது.
இத்தனையும் ரசிக்கத்தான் யாருமில்லை அந்த தீப்பெட்டிகளை அடுக்கியது போன்று நின்று
கொண்டிருக்கும் வானுயர்ந்த கட்டிடத்தில். அவரவர் வேலையில் மூழ்கிருந்தனர்.பல பேருக்கு மழை
பெய்வது கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அந்த பல பேரில் ஒருவன் தான் விக்ரம்.படுக்கையில் படுத்தவாறு கால் மேலே கால் போட்டுக்
கொண்டு , கைகளில் ஒரு பொருளை பிடித்தவாறு , அதை மும்ரமாக உற்று நோக்கியவாறு இருந்தான்.
உங்கள் அனுமானம் சரியே அது மனிதர்களுக்கு இன்னொரு விரலாய் முளைத்த கைப்பேசியே !!
மணிகணக்காக படுத்தபடி விளையாடிக் கொண்டிருக்கிறான் பதின்பருத்தை தொடவிருக்கும் எட்டாம்
வகுப்பு படிக்கும் விக்ரம் .இந்த காலத்து பிள்ளைங்க வாங்கிட்டு வந்த வரமா சாபமா தெரியவில்லை
இப்படி படுத்தபடி உட்கார்ந்தபடி விளையாடுவது.
சிறிது நேரத்தில் அவனுடைய கைப்பேசி விடுவிப்பு கேட்டு லோ பேட்டரி லோ பேட்டரி என்று
சிணுங்க ஆரம்பித்தது . அப்போது தான் அவனும் மெய்நிகர் உலகத்தில் இருந்து ( விர்சுவல் வோர்ல்டு
) நிஜ உலகிற்கு வந்தான். பின் கைப்பேசியை மின்னூட்ட கிடத்தி விட்டு அறையை விட்டு வெளியே
சென்றான்.
பால்கனியில் தன் பாட்டி அமர்ந்திருப்பதைக் கண்டு அவ்விடம் நோக்கி நடந்தான். மழை பெய்து
கொண்டிருந்ததால் நிலவும் பூமியை எட்டிப் பார்க்க மனமின்றி தன் வீட்டிலேயே அமர்ந்து கொண்டது
போலும். அந்த வானுயர்ந்த கட்டிடத்தில் ஆங்காங்கே மின் விளக்குகள் போடப்பட்டன. அதுவே
வீட்டினுள் மனிதர்கள் இருப்பதை நிச்சயப்படுத்தியது.
பால்கனிக்கு சென்றவன் அங்கு தன் பாட்டி செய்து கொண்டிருப்பதைப் பார்த்து சற்றே
அதிர்ச்சியுற்றான்.விக்ரமோட பாட்டி அப்படி என்ன செய்து கொண்டிருந்தார் என்பதைப் பார்க்கும்
முன் பாட்டியைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
விக்ரம் அப்பாவோட அம்மாதான் நம்ம அம்பிகா பாட்டி. பாட்டிக்கு ஒரு மகன் ஒரு மகள் . மகள் லலிதா
கல்யாணத்திற்கு பின் குடும்பத்தோடு வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறாள்.. வருடம் ஒரு முறை இந்தியா
வந்து செல்வாள். மகன் தான் நம்ம விக்ரமோட அப்பா . சென்னையில் உள்ள ஒரு பெரிய தனியார்
கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார். தன்னுடன் வந்து இருக்குமாறு எவ்வளவு முறை
சொல்லியும் தாத்தாவும் பாட்டியும் சொந்த ஊரை விட்டு வருவதாக இல்லை. பிள்ளைகள்
பேரப்பிள்ளைகள் கூட இல்லை என்ற குறையை தவிர வீடு , தோட்டம் , சொந்த பந்தங்கள் என
அவர்கள் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.
காலை மற்றும் மாலைப் பொழுதில் வீடு வாசலெல்லாம் கூட்டி பெருக்கி விட்டு , வாசலில் தண்ணீர்
தெளித்து கோலமிட்டு விளக்கு ஏற்றி வைத்தால்தான் அம்பிகா பாட்டிற்கு திருப்தியாக இருக்கும். வயது
70 தொட்டு விட்டாலும் அவளின் மனதின் உறுதியும் உடம்பின் வலுவும் சற்றும் குறையவில்லை.
வேலப்பன் தாத்தா உலகை விட்டு சென்ற பின் பாட்டி துணையிழந்த பாட்டி கடந்த ஒரு வருடமாக
திண்டாடித்தான் போயிருக்கிறாள். அவளை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருப்பது வேலப்பன் தாத்தா
விட்டு சென்ற தோட்டமும் வீடும் தான். செடி கொடிகள் வளர்ப்பதில் பராமரிப்பதில் மிகுந்த ஆர்வம்
கொண்டவர் வேலப்பன் தாத்தா.இப்போதெல்லலாம் அவ்வப்போது உடம்பு சுகம் இல்லாமல்
போகிறது பாட்டிக்கு என்றாலும் அவள் தோட்டத்தை பேணிக் காப்பதில் உறுதியாக உள்ளாள்.
அம்மா தனியாக இருக்க வேண்டாம் என்ற மகனின் மிகுந்த வற்புறுத்தலுக்குப் பின் தற்போது
சென்னை வந்துள்ளாள் பாட்டி சில நாட்களில் ஊர் திரும்பிட வேண்டும் என்ற மனக்கணக்குடன்.
பாட்டி இப்ப என்ன செய்து கொண்டிருக்கிறார் ? ஏன் விக்ரம் அதிர்ச்சியுற்றான்?பால்கனியில்
அழகுக்காக சில செடிகள் வைக்கப்பட்டிருக்கிறது. இரண்டொரு செடிகள் வாடி போயிருக்கின்றன.
வீடு சுத்தம் செய்ய வருகின்ற அக்கா தண்ணீர் ஊற்றினால்தான் உண்டு.மற்றவருக்கு அவரவர்
வேலையை செய்வதே பெரிது. பாட்டி அந்த வாடிய செடிகளின் அருகில் அமர்ந்து அதனை தடவிக்
கொடுத்து ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்.அதைக் கண்டுதான் விக்ரம் அதிர்ச்சியுற்றான்.
ஏன் பாட்டி ? இங்க என்ன பண்ணிட்டு இருக்கிங்க ?
எல்லா செடிகளோட பேசிட்டு இருக்கிறேன் விக்ரம்.பாவும் இந்த செடி வாடி போயிடுச்சு. அதான்
சமாதனப் படுத்திட்டு இருக்கிறேன்.
ஹா ! ஹா! அட போங்க பாட்டி காமெடி பண்ணாதீங்க. வாடினா வேற செடிய வாங்கி வெச்சிடலாம்.
என்ன காமெடியா ! நான் உண்மையைதான் சொல்றேன். அப்படி விட கூடாது செடிகளை.
செடிகளுக்கு உணர்வுகள் இருக்கு நம்ம உணர்வுகளை புரிந்து கொள்ளவும் செய்யும்.
எனக்கு ஒன்றுமே புரியலை பாட்டி .
சரி உனக்கு புரிகிற மாறி சொல்றேன் கேளு. நீ இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டு இருந்த ?
நான் விளையாடிட்டு இருந்தேன்.
யார்கூட விளையாடுகிட்டு இருந்த?
மொபைல விளையாடிகிட்டு இருந்தேன்.
அதாவது ஒரு உயிரில்லாத உணர்வில்லாத பொருளோட விளையாடிகிட்டு இருந்த? அது எப்படி
சாத்தியம்.
ஆமாம் பாட்டி , அது ஒரு டிவைசஸ். அதுல விளையாட முடியும்.
அதே மாறி தான். நம்மள மாரி உயிருள்ள செடிகளுக்கு உணர்வுகள் இருக்கு.நீ வேண்டுமானால்
செடிகளோட பழகி பாரு புரியும்.
அட போங்க பாட்டி இதுலாம் போர் என்று பாட்டி ஆர்வத்துடன் சொல்வதை கேட்ககூட
மனமில்லாமல் அறைக்கு சென்று விட்டான் கைப்பேசியை எடுக்க.
விக்ரமோட நண்பர்கள் வீட்டிற்கு வந்து செல்வது உண்டு. அவர்களும் அவனைப் போல்தான் செடிகள்
இயற்கை மீதான பற்றும் பிடிப்பும் இல்லாமல் இருந்த்தனர். பாட்டி செடிகளோடு பேசுவது கண்டு
சிரிப்பது வழக்கமாகி விட்டது.
அவர்களின் கேளிக்கைகள் செவி சாய்க்காமல் பாட்டி எப்போதும் போல் அவள் செடிகளைப் பேணிக்
காத்து வந்தாள். அவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையே என்ற வருத்தம்தான் பாட்டிக்கு.
ஒரு வாரம் சென்றது.
பால்கனியில் வாடியிருந்த செடி துளிர் விட ஆரம்பித்திருந்தது .
அதை கண்ட விக்ரமுக்கு இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி . கூச்சலிட்டு வீட்டில் அனைவரையும் தன்
நண்பர்களையும் கூப்பிட்டான் .
எல்லாரும் வாங்க இங்க. பாருங்க .செடி புதுசா முளைச்சு வருது.
இதற்கு முன் இப்படி பட்ட உணர்வை அவன் அடைந்தததில்லை . புது விதமாக இருந்தது.
பாட்டி சொல்வதில் ஏதோ ஒன்று உள்ளது என்பது புரிய ஆரம்பித்த்தது.
இந்த செடியோடு விக்ரமின் செடிகள் மீதான பற்றும் வளரும் என்பதில் சந்தேகமில்லை.
அந்த வானுயர்ந்த கட்டிடத்தில் உள்ள பல பேருக்கு முக்கியமாக விக்ரம் போன்ற இளம்
தலைமுறையினருக்கு இயற்கை மீதான பற்று ஆர்வம் இல்லாமல் இருப்பது கண்டு பாட்டிக்கு மிகுந்த
வருத்தம் அடைந்த பாட்டிக்கும் புது நம்பிக்கை பிறந்தது இளம் தலைமுறையினர் மேல்.
இந்த இயற்கை மீதான ஆர்வத்தை அனுபவத்தை அனைவருக்கும் கொண்டு வருவதற்கு தாம் இங்கு
கொஞ்ச நாள் இருக்கத்தான் வேண்டும் என ஊருக்கு செல்லும் முடிவை தள்ளிபோட்டிருக்கிறாள்
பாட்டி.
இனி வரும் நாட்களில் அந்த வானுயர்ந்த கட்டிடத்தில் செடிகளோடு சேர்ந்து மனிதர்களும் மழையை
இரசிக்க வாய்ப்பிருக்கிறது.
நீங்களும் முயற்சித்து பாருங்கள் .செடிகளோடு நிறைய பேசுங்கள் பழகுங்கள்.
நன்றி.
By Jeevitha S (ஜீவந்த் )

Comments