நிலவுக்கு என்னடி கோபம்
Updated: Jul 15, 2025
By Jagathisan P
கோபம் கொள்வது ஏனடி? உனை
கொண்டவன் குழந்தை தானடி!
சாபம் விட்டதில் வந்தததோ ? மனம்
சந்தேகத்தில் நொந்ததோ?
தூபம் போட்டு வளர்த்ததோ? நெடுந்
தொடர்கள் சொல்லி கொடுத்ததோ?
தீபம் ஏற்றிட வந்த நீ
கொடுந்தீயை மூட்டிட நினைப்பதோ?
கார்த்திடும் காயைக் கடிப்பாரோ நற்
கனியின் சுவையை தவிர்ப்பாரோ
பாற்கட லமுதை வெறுத்தொரு
பாம்பின் விஷத்தை குடிப்பாரோ
பார்த்திடும் வேலை சிரமங்களை- தினம்
பார்க்காமல் பல நாள் உழைத்து
சேர்த்திடும் செல்வம் நமக்கும் உன்
சேய்க்கும் என்பதை அறியாயோ
சினைக்கரு தாங்கி பெற்றெடுத்து
சீர் சிறப்புடன் வளர்த்து உரமேற்றி
தனக்கொரு முகவரி தந்தவர்க்கு - அவர்
தள்ளாடும் வயதான பின்பு - பணக்
கணக்கின்றி செலவிட்டு உடல்
காப்பது பிள்ளைகள் கடனன்றோ
உனக்கும் எனக்கும் உயிர் தந்து நமை
உயர்த்திய பெற்றோர் இறையன்றோ
தெம்பும் திறனும் இருக்கையிலே மனம்
திடமாய் துயர்களை தாங்கி விடும்
வம்பு வழக்கு வலிகள் என எது
வந்தாலும் உடன் நீங்கி விடும்.
என்பும் தோலும் வயதாகி துணைக்
கேங்கும் முதுமை வந்திடவே
அன்பும் பரிவும் இல்லாமல் தினம்
அருகில் இருந்து என்ன பயன்?
பிணக்கம் பேசத் தீர்ந்து விடும் அந்த
பேச்சை குறைக்க பகை வளரும்.
இணக்கம் கொண்ட உறவினில் தான் நல்
இன்பம் என்றும் இணைந்து வரும்.
சுணக்கம் கூட்டும் சுமையென்று நம்
சொந்தங்களையும் ஒதுக்காமல்
வணக்கம் சொல்லி வரவேற்று வரும்
வாழ்நாளெல்லாம் மங்களம் தான்.
By Jagathisan P

Comments