தூக்கம்
By Jeyanthi R
பிறப்பு முதல் இறப்பு வரை
நீ இல்லா இரவு
நோய்களின் வரவு
இவ்வுலகில் மன அழுத்தத்தின் வாசற்படிகளோ தாராளம்
இனிமையாய் இரவை கடக்க விரும்புவோரே ஏராளம்
கருவறைக்கு விடை கொடுத்து, இக்கனவுலகிற்கு படையெடுத்து,
புறந்தள்ளியவளுக்கு புன்னகை விதைத்து,
பசியடங்க அவள் பாலையும் புசித்து,
இருவிழி சொக்கி கருவிழி மூடி,
உன்னை அழைக்கின்றானே!
குளிரூட்டியால் வீடே குளிரில் நடுங்க,
குழப்பத்தின் மத்தியில் மனமோ படபடங்க,
குங்கமப்பூ மிதந்தப்பால் தொண்டை வழி தான் இறங்க,
இலவம்பஞ்சு மெத்தை மேலே உன்னை அழைக்கின்றானே!
எடுத்த வேலை தான் முடிக்க,
எஜமானாரும் படியளக்க,
பங்கு பணம் பிரிச்சாலும், பசி வயிற்றை அரித்தாலும்,
நிலா ஒன்னு வழிகாட்ட,
நீச்சத்தண்ணி வயிறு நிறைக்க,
உடம்பு வலி உசுரெடுக்க,
கட்டாந்தரை மேல கந்தல் துணிதான் விரிக்க,
கூவி அழைக்கின்றானே!
படிச்சு முடிச்சாச்சே,
பட்டமும் தான் வாங்கியாச்சே,
ஏறாத படியில்ல,
ஏங்காத நாளில்ல,
வேலையோடு வந்துடுன்னு,
விபூதி வச்சு விட்டவளுக்கு,
என்னென்னு சொல்வேனோ,
நானெல்லாம் என்னதுக்குனு சொல்வேனோ,
பணமில்லா பையோட,
பசியெல்லாம் வயிற்றோட,
கவலையெல்லாம் மனதோட,
நாளைக்கு நாளாவது,
நல்லபடியே விடியட்டுமுன்னு,
கதறி அழைக்கின்றானே!
வெள்ளி செவ்வாய் கிழமைன்னு,
கோவிலே கதியின்னு,
பக்தியில் முத்தி போய்
பைத்தியமா நானிருந்தேன்
இருந்தென்ன
தீரா நோயின் எல்லை மீறல்
நேரந்தவறா உணவு கட்டுப்பாடு
மாதந்தவறா பரிசோதனை
மாலை தவறா பாத யாத்திரை
எம் புள்ள பணமெல்லாம்
மருந்து சீட்டா உருமாறி
அலமாரியில் ஓய்வெடுக்க
ஒவ்வொரு நாளும்
நான் உனக்காக ஏங்கி நிற்க
நீ இல்லா இரவு
மானிடனின் அழிவு
உன்னை கண்போரெல்லாம்
அழைப்பது இருக்கட்டும்
வகுப்பறை மாணாக்கரின்
வளர்ப்பு மகளே!
வருங்கால சந்ததியினரின்
புரியாத புதிரே!
நீ யாருடன் செல்வாய்
சொல்
தூக்கமே
யாருடன் செல்வாய்
சொல்!
By Jeyanthi R

Comments