செவிலியராய் இருந்து பார்
By Jeyanthi R
தன்னலம் கருதாமல்
பிறர் நலம் கருதும்
ஓய்வறியா சூரியனே,
பிறர் பிறப்பிலும் இறப்பிலும்
தம் தடத்தை பதிப்பாய்
உறங்க கெஞ்சும் உறங்கா விழிகளுடன்
இரவு பணி முடிப்பாய்.
பசி பதவி உயர்வுப் பெற்று
மறுத்துப்போதல் பட்டம் வாங்கி
இறுதியில் இல்லாமல் போகக் காண்பாய்.
பள்ளிக் குழந்தைகள் போல நீயும்
விடுமுறைக்கு ஏங்கி நிற்பாய்.
உன் வீட்டு விசேஷங்களுக்கே
நீ விருந்தாளியாய் போவாய்.
தன்னை வருத்தி பிறரை காப்பதில்
மெழுகுவர்த்தியே தோற்றுப்போகும்.
பிறந்தக் குழந்தையோ பெற்றவளை
காணும் முன்
உன்னைத்தான் கண்டு செல்லும்
மரண செய்தி மனதை உலுக்கினாலும்,
உன் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கவே வட்டி கேட்கும்.
இரத்தம் கண்டால் மயங்கும் நீ
நொறுங்கிய எலும்பையும் நூதனமாய் கையாள்வாய்.
கோரிக்கைகளே ஏதுமின்றி
கால வரையற்ற உண்ணா விரதமிருப்பாய்
உடல் வலி உற்றத் தோழன் ஆவான்
நடத்துனர் கூட நலம் விசாரிப்பார்
உறவுகளே ஓரம் நிற்க
உயிர்களுடன் உரிமை கொள்வாய்
பணிச்சுமைகள் பஞ்சாய் பறக்க விட்டாலும்
பணி திருப்தி மனதை கொள்ளை கொள்ளும் தருணம் உணர்வாய்.
உன் பங்கினால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை,
உன் பணி நாட்களின் எண்ணைக்கையை விட அதிகரிக்கும்.
அருவருப்பில்லா அழகு தேவதையே,
வெள்ளை நிறத்தின் அடையாளமே,
கருணையின் பிறப்பிடமே,
இரக்கத்தின் ஊற்றே,
மாண்புமிகு செவிலியர்களே !!
By Jeyanthi R

Comments