அவர்கள்
By Jeevitha S
அன்று மாலை 6 மணி . வழக்கத்தை விட அலுவலகம் வேகமாக இயங்கிக் கொண்டிருந்தது.
ஹேய் ! நீ இன்னும் முடிக்கலையாடி ? ஊருக்குப் போகனும்னு சொன்ன ? தாரா வினவினாள்.
முடிச்சுட்டேன் முடிச்சுட்டேன் . இதோ இப்ப கெளம்பிறேன் டி !
இந்தா குடையை எடுத்துக்கோ . வரப்ப ஒழுங்கா உங்க ஊரு முறுக்கு வாங்கிட்டு வா !
ம்ம்ம் சரி டி. நீ ஓவரா ஊர் சுத்தாம இரு. சரி நான் கெளம்பிறேன் டி. லேட் ஆயிடும் .பை பை .
ஹ்ம் பை டி. பார்த்துப் போ. தாரா விடைக் கொடுத்தாள்
ட்ராபிக்ல அடிச்சு புடிச்சு முட்டி மோதி ஒரு வழியா டைம்க்கு வந்துட்டேன். 4 நாள் விடுமுறை வரதுனால இன்னைக்கு கூட்டம் அதிகமாவே இருக்கு.எல்லார் முகத்திலும் வேலையோட களைப்பு அலைச்சலோட சோர்வு ஒரு பக்கம் இருந்தாலும் ஊருக்கு போகிற குதூகலம் இல்லாம இல்ல. போன்ல தாராவுக்கும் அம்மாக்கும் அப்டேட் கொடுத்துவிட்டு வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தேன்.
இரண்டு சிறுவர்கள் துரு துருனு விளையாடிட்டு இருக்கறாங்க அம்மாவோட மேற்பார்வையில். அப்பா கைப்பேசில ஏதோ பண்ணிகிட்டு இருக்கார்.அம்மா பசிக்குது சின்னவன் கேட்கிறான்.அம்மா வீட்ல ஒழுங்கா சாப்பிடுனு சொன்னேன்ல என வசைபாடிவிட்டு பிஸ்கட் எடுத்து நீட்டினாள். அப்போ பசிக்கல இப்போ பசிக்குதுமா என சாக்கு சொல்லிவிட்டு சாப்பிட்டான். (அவன் சொன்னத் தோரனையில் எனக்கு சிரிப்பு வந்தது).பெரியவன் அப்பாவிடம் "என்ன பண்றீங்க அப்பா ?". பஸ் எங்க வருதுன்னு பாக்கிறேனடா . உடனே அவன் " எங்க பேஸ்புக் லயா ?? ".( எனக்கேத் தூக்கிப் போட்டது என்னம்மா கிராஸ் கேள்வி கேட்கராங்கா? ஆத்தி )அப்பா சுதாரித்துவிட்டு போனை ஆப் செய்தார்.
என் பார்வையை வேறு பக்கமாய் திருப்பினேன். என்னைப் போலவே அலுவலக முடித்து வந்த இளவட்டங்கள் பலர் கீழ்நோக்கி தங்கள் கைக்குழந்தையைப் (கைப்பேசி) பார்த்துக் கொண்டிருந்தனர்.
மறு பக்கம் 60 வயது மதிக்கத் தக்க வெள்ளை வேட்டி சொக்காவில் கம்பீரமாய் ஒரு தாத்தா அருகில் மங்களகரமாய் ஒரு பாட்டி .அவர்களுக்குள்ளே பல கதைகள் பேசிக் கொண்டிருந்தனர்.
ஒரு சில பெரும் மழைத் துளிகள் விழுந்தது. சற்று நேரத்தில் சட சட வென மழை வேகம் பிடித்தது. ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது . ஒதுங்கக் கூட ஒரு மரமில்லை அந்த மெட்ரோ நகரத்தின் சாலையில்.கடைகளுக்குள் பாதி கூட்டம் மறைந்து கொள்ள , என்னைப் போன்று குடைக்குள் சிலர் பதுங்கிக் கொண்டனர். இளவட்டங்கள் தங்கள் கைக்குழந்தைகளைக் காப்பாற்றும் பணியில் பெட்டிக்கடையின் மூடாக்குக்கு அடியில் தஞ்சம் அடைந்தனர் தாங்கள் நினைந்தவாறு.
அந்த இரண்டு வாண்டுகளுக்கு ரெயின்கோட் போட்டுவிட்டு முழுக்குடும்பமும் ஒரு குடைக்குள் அடங்கியது.
தாத்தா தன் தோள் துண்டைப் பாட்டி தலையில் போட்டு விட்டு அதே கம்பீரத்துடன் நிற்கிறார். பாட்டி அவர் போட்டுக்கொள்ளும்படி வாக்குவாதம் செய்ய உனக்குதான் ஒத்துகாது நீயே போட்டுக்கொள் என பிடிவாதமாய் நின்றார்.
இவர்கள் அன்புச் சண்டையில் மழையே பின் வாங்கியது. சற்று நேரத்தில் நின்றது.
தாத்தா தன் வேட்டி சட்டைகளை பிழிந்து விட்டு தலை துவட்டி விட்டு மழை பெய்த சுவடற்றவர் போல் ஆனார்.
ஜீன்ஸ் போட்ட இளவட்டங்களோ மழையை திட்டிக் கொண்டிருந்தனர் முழுதும் நினைந்து ! தாத்தாவின் சாதரண பார்வைக் கூட "ஏண்டா வெள்ளக்காரன் அவன் குளிருக்கு ஜீன்ஸ் போட்ரான். நீங்களும் ஏண்டா ? வேட்டி சட்டை அருமை இப்பப் புரியுதா "என்று ஏளனமாகக் கேட்பது போல் தோன்றியது என்னமோ அவர்களுக்கு .
பேருந்துகளும் வந்தது. அவரவர்கள் அவரவர் ஊருக்கு பயணம் ஆனார்கள்.நானும் புது அனுபவங்களுடன் !!
By Jeevitha S

Comments