கனவு மைதானம்
By Sasikumar K
வான்வெளி அரசன் முகங்காட்டாத வேளையிலும், எங்கள் மணிக்கடிகாரம் மேளதாளங்களுடன் துயிலெழுப்பும் நாள் அது!
சீவிய தென்னை மட்டைகளும் நறுக்கிய கருவேலங்குச்சிகளும் அலங்கரிக்குமே பொட்டல் காட்டு மைதானத்தை!
கண்மாய் வரப்புகளும் பனை மரங்களும் மேடைகளாகுமே, எங்கள் பார்வையாளர்களாகிய கால்நடைகளுக்கும் பறவைகளுக்கும்!
தட்டான்களும் வண்ணத்துப்பூச்சிகளும் வர்ணணையாளர்களாக வலம்வர, அங்கே துள்ளி விளையாடும் மீன்களும் எங்கள் உற்சாக கலைஞர்கள்! தென்னை மட்டையால் சிதறிய பந்தாக, எங்கள் சோகங்களை மறந்து சிரித்து மகிழ்ந்த ஓர் இடம்! கர்வம் கொண்ட அந்த வானமும் செவ்வானமாக, வீடு திரும்பினோம் செம்மண் உடைகளுடன்!!
By Sasikumar K

Comments