By Jagathisan P
கூழ்தினம் குடித்திட குறைவிருந்தாலும் குற்றம்
குறை தவிர்த்து
கொள்கையில் குன்றென நிமிர்ந்து நிலைத்துயர்
குடிமகனாய் வளர்ந்து
ஏழ்மையில் இன்றிருந்தாலும் நாளை
எல்லாம் மாறுமென்ற
ஏக்கம் செய்திடும் தாக்கம் வாழ்க்கையின்
நோக்கம் புரிய வைத்து
தாழ்வென குலத்தின் சாதியின் பெயரால்
தாக்கிடும் போதினிலும்
தகுதி திறமை இருந்தும் உயர்வை
தட்டிப் பறித்திடினும்
சூழ்நிலை யாவையும் புரட்டிப்போட்டு
சூடுகள் வைத்தாலும்
சொந்தமும் நட்பும் சுற்றி வந்தே பல
சூழ்ச்சிகள் செய்தாலும்
பாழ் மனதானவர் பாதையில் முட்களை
பரப்பி இருந்தாலும்
பட்டம் பதவி பணம் கொண்டே பிறர்
பாதகம் புரிந்தாலும்
மூழ்கிக் குளித்து தன் மூச்சடக்கிப் பெறும்
முத்தினை சொத்தினையே
மோசடி சூதுகள் செய்ததை யடைந்திட
முனைந்திடு வஞ்சகமும்
ஊழ்வினை மனதினில் சோர்வினை தந்துனை
உழன்றிட விட்டாலும்
உலகம் முழுதும் ஒன்றாய் சேர்ந்துன்
உணர்வினை பழித்தாலும்
வீழ்வாய் என்பதற்கென பல நாட்கள்
வேள்விகள் புரிந்துவரும்
வீனர்கள் எண்ணங்கள் அடிபட பிடிபட
விரக்தி கொண்டோடிடவும்
வாழ்வினில் வந்திடும் சோதனை யாவிலும்
வழிமுறை யைக் கண்டு
வாய்ப்புகள் வருகையில் வசப்படுத்தித் தரும்
வலிகளைத் தாங்கி நின்றால்
ஆழ்மனம் நின்றுனதாசையும் தேவையும்
அடைந்திட வுதவிடவே
அம்மா அப்பா ஆசான் ஆசிகள்
அனைத்தும் துணை வருமே
By Jagathisan P
Commentaires