By Valli.M
வள்ளியூர், எனும் கிராமத்தில் அடர்ந்த காடுகளுக்குள்ளே பல மர்மங்களும் , புதையல்களும் உள்ளது என்று பலராலும் நம்பப்பட்டது.
அந்த காடுகளுக்கு நடுவே அமைந்த குன்றுகளின் இடுக்குகளில் யாரும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு புதையல் இருப்பதாகவும் மற்றும் அதனை எடுக்க சென்ற யாரும் திரும்பி வரவில்லை என்று பாட்டி தாங்கள் வாழும் வள்ளியூரின் கதை சொல்ல கயல் கேட்டுக்கொண்டிருந்தாள்.
இக்கதை அறிந்ததும் அவள் கண்கள் பிரகாசித்தன. இந்த புதையலை எடுத்தால் நம் பிரச்சினைகளை சரி செய்து பாட்டியுடன் சந்தோசமாக வாழலாம் என்று எண்ணினாள். அம்மா, அப்பா இல்லாததால் பாட்டியே அவளுக்கு உலகம்.
அந்த புதையலை எப்படி அடைவது என்று யோசிக்கும் போது புதையலை பற்றி முற்றிலும் அறிந்த பாட்டி கூறிய முனிவர் நினைவுக்கு வந்தார். அவரிடம் சென்று இது பற்றி கேட்கும் போது முனிவர் புதையல் இரகசிய இடத்தையும் அதன் மந்திரத்தையும் கூறி அனுப்பினார். அவளும் நன்றி கூறி புறப்பட்டாள்.
மறுநாள், முனிவர் கூறிய இடத்தை தேடி அடர்ந்த கட்டுக்குள் பயணிக்க தொடங்கினாள். நெடுந்தொலைவில் ஒரு குன்று இருப்பதை பார்த்தாள். வேகமாக அதனை நோக்கி ஓடினாள். இடத்தை கண்டுபிடித்ததை எண்ணி துள்ளி குதித்தாள். அந்த குன்றுக்கு இடையே ஒரு பெரிய சுரங்கம் இருப்பதை பார்த்தாள். சுற்றும் முற்றும் பார்த்து புதையலை கண் மூடி யோசித்து பெரு மூச்சி விட்டு, அதிக மாயையும் புதிர்களும் நிறைந்த அந்த சுரங்கத்துக்குள் நுழைந்தாள்.
அங்கு உள்ளே நுழைந்ததும் ஒரு வித மாயை புகை அவளை மயக்கியது. ஆனால் அவள் அதற்கு அசையவில்லை. மேலும் அந்த குகையில் பலரது எலும்பு கூடுகளும், ஆன்மாவும் இருப்பதை கண்டு சற்றும் மனம் தளராமல் முனிவர் கூறிய மந்திரத்தை முணுமுணுத்துக் கொண்டே முன்னோக்கி நடந்தாள்.
அடுத்ததாக, அவளுக்கு எந்த பாதை வழியே பயணிக்க வேண்டும்? என்பதில் புதிர் இருந்தது. சூரியன் , சந்திரன் , மற்றும் நட்சத்திரம் என மூன்று விசித்திர குறியீடு உள்ள பாதைகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அப்போது அவளுக்கு “பகலின் பாதையை தேர்ந்தெடு” என்று கனத்த குரல் கேட்டது. சட்டென்று யோசித்து சூரியன் குறியீடு உள்ள பாதையை தேர்ந்தெடுக்க மீதி இருந்த இரண்டு பாதைகளும் காணாமல் போயிற்று.
நிம்மதி பெருமூச்சு விட்டு சென்ற கயலுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு பெரிய பள்ளத்திற்கு நடுவே கல் பாலம் இருந்தது. ஆனால் கல் தோன்றி மறைவதற்க்குள் பாலத்தை கடக்க வேண்டும். இது கயலுக்கு மிகவும் சவாலாக இருந்தது. ஆனாலும் அவள் மனம் தளரவில்லை. சற்று பயமும் அவளை சுற்றி கொண்டே இருந்தது. அவள் விட்டு கொடுப்பதாக இல்லை.
தன் முன்னே இருக்கும் கற்களை மிதிக்க ஆரம்பித்தாள். இடது காலால் ஒரு கல்லை மிதிக்கும் போது தான், அது மறைந்து போவதை உணர்ந்தாள். உடனே அடுத்த கல்லுக்கு தாவி இப்படியாக துல்லியமாக நேரத்தையும் , கல்லையும் கணித்து மந்திரத்தை கூறி கொண்டே மறு பக்கத்தை அடைந்தாள்.
அங்கு சுற்றிலும் கதவுகளால் மூடப்பட்ட அறைகள். மேலும் தொடர சரியான கதவை தேர்தெடுத்தால் தான் தப்பிக்க முடியும். அப்போது அடேய் குரல் ஒலித்தது. “100 லிருந்து 10 ஐ எத்தனை முறை கழிக்க முடியும் ? அதுவே உன் பாதை” என்று கூறி மறைந்தது.
அவள் புத்திசாலித்தனமாக யோசித்து 1-ஆம் எண் கதவை திறக்க மற்ற கதவுகள் வெடித்து சிதறின. பதற்றத்துடன் கதவை தள்ளி உள்ளே சென்றாள். அங்கு பெரிய அறையின் மீது முட்களும் , புதர்களும் சூழ்ந்து இருந்த கதவை மெல்ல திறந்தாள். அவளுக்கு பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது. அதில் தங்கம் மற்றும் வைரங்கள் இல்லை ஒரு பெரிய கண்ணாடி மட்டுமே இருந்தது.
ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்த அவள் கண்ணாடியை உற்று நோக்கி கொண்டே இருந்தாள். பின் கண்ணாடியை பார்த்து ஒரு கர்வம் கலந்த புன்னகை செய்தாள்.
இதுவரை யாரும் அடைய முடியாத இந்த இடத்தை அடைந்ததை எண்ணி பெருமை பட்டாள். அந்த நொடி அவள் உணர்ந்தாள் உன்மையான புதையல், அவள் தேடி வந்த பொன்னோ பொருளோ இல்லை, அவள் கடந்து வந்த கடினமான பாதையும் , அதற்கான முயற்சியும், அதன் மூலம் அவள் பெற்ற மனதைரியமும் மட்டுமே உண்மையான புதையல் என்று.
இந்த பயணம் தன்னில் ஒரு அசைக்க முடியாத மன உறுதியை உருவாக்கியது என்று எண்ணி பெருமை பட்டாள்.
மன உறுதியுடன் வெளியே வந்த அவளுக்கு வாசலின் வெளியே தங்கமும் , வைரமும், பொற்காசுகளும் நிறைந்த ஒரு பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. மறுபடியும் அதே குரல் “இது நீ தேடி வந்த புதையல் அல்ல, உன் மன உறுதிக்கான புதையல் சென்று வா சிறுமியே!” என்றது. அவள் அதை மெல்ல கையில் எடுத்து முனிவர் கூறிய மந்திரத்தை நினைவு கூர்ந்தாள். இதோ அந்த மந்திரம்,
"உன்னால் முடியும்!
மனம் தளராதே!
முயற்சி செய்து கொண்டே இரு!"
தன்னை பற்றிய ஆழமான புரிதலும் மற்றும் மன வலிமையும் தான் அவள் அடைந்த புதையல் என்று தெரிந்து கொண்ட கயல் விழி பெட்டியை கையில் எடுத்துக்கொண்டு தன் பாட்டியைக் காண துள்ளிக் குதித்து ஓடினாள்.
******முற்றும்******
By Valli.M
コメント